கரூர் துயரத்தால் முடங்கியிருக்கும் விஜய்யிடம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருமே நேரில் சென்று ஆறுதல் சொல்லிவிட்டனர். மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனும் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல் பாஜக தலைவர் நட்டா அமைத்த தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் 8 பேர் அடங்கிய குழுவும் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறியது.
மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவரும் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தார். முன்னதாக, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் கரூரில் தீவிர விசாரணை மேற்கொண்டது. அதேபோல் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், விஜய் கரூருக்குச் செல்லாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தச் சூழலில் நேற்று தொடங்கி விஜய் பாதிக்கப்பட்டோரிடம் வீடியோ கால் மூலம் பேசி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கரூர் துயரத்தால் முடங்கியிருக்கும் விஜய்யிடம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 6-ம் தேதி இருவரும் அரைமணி நேரம் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஜனவரிக்கு பிறகு தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், கரூர் விஷயத்தில் முழு ஆதரவு அளிப்பதாக விஜய்யிடம் எடப்பாடி கூறியதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.