ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் நேஷனல் வங்கியின் டெல்லி சன்சாத் மார்க் கிளை சார்பில் தேசிய அளவிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதளுக்கான பிரச்சாரம் 4.0 – ன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான முகாமை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறைசெயலாளர் ஸ்ரீனிவாஸ் நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஓய்வூதியதாரர்களிடையே உரையாற்றிய அவர்: இது ஓய்வூதியதாரர்கள் வாழ்வியல் முறைகளை எளிதாக்குவதுடன், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள நடைமுறைகளுக்கான வசதிகளையும் பெரிதும் மேம்படுத்தியுள்ளது. மூத்த குடிமக்கள் / நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி நாடு முழுவதும் உள்ள 39 நகரங்களில், 185 இடங்களில் இந்த முகாம்களை நடத்துகிறது.
நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் குறித்த பிரச்சாரம் 4.0, மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையால் பல்வேறு தரப்பினருடன் (ஓய்வூதிய விநியோக வங்கிகள், இந்திய அஞ்சல் பேமெண்ட் வங்கி, ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கங்கள், தொலைத்தொடர்புத் துறை, தொழிலாளர் வருங்கால வாய்ப்பு நிதி அமைப்பு, ரயில்வே, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் & மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) இணைந்து நவம்பர் 1 முதல் 30, 2025 வரை நடத்துகிறது.
இது நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் பயனடையும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை, 67.94 லட்சம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 40.42 லட்சம் சான்றிதழ்கள் முக அங்கீகாரம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் 5 வரையிலான 5 நாட்களில், 25.60 லட்சம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 15.62 லட்சம் (61%) சான்றிதழ்கள் முக அங்கீகாரம் மூலமும். 90 வயதுக்கு மேற்பட்ட மூத்த ஓய்வூதியதாரர்களின் 37,000 – க்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களும், 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களின் 985 டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களும் உருவாக்கப்பட்டுள்ளன.



