தமிழகத்தில் மர்மங்களும் அதிசயங்களும் நிறைந்த பல கோயில்கள் உள்ளன. அந்த வரிசையில், சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே அமைந்துள்ள சித்தர் கோவில் தற்போது பக்தர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக தோல் வியாதிகள் குணமாகும் என்ற நம்பிக்கையால், இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.
இந்த கோவில், கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மூலிகைத் தாவரங்கள் அதிகமாக காணப்படும் இந்த மலைப்பகுதி, பழங்காலத்திலிருந்தே சித்தர்கள் வாழ்ந்த புனித நிலமாக கருதப்படுகிறது. இங்கு உள்ள இயற்கை சூழல், மருத்துவ குணம் கொண்டதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த கோவிலின் மிகப்பெரிய சிறப்பு, எப்போதும் வற்றாத ஏழு மூலிகை கிணறுகள் ஆகும். இந்த கிணறுகளில் உள்ள நீர், மலையிலிருந்து மூலிகைகள் வழியாக வடிகட்டி வரும் என்பதால், மருத்துவ குணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், எவ்வளவு கடுமையான தோல் வியாதியாக இருந்தாலும், இங்கு நீராடினால் குணமாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
பழமையான நம்பிக்கைகளின்படி, காலாங்கி சித்தர் மற்றும் திருமூலர் போன்ற சித்தர்கள் இந்த பகுதியில் தவம் செய்து, மனிதனை இளமையாக்கும் அரிய மூலிகைகளை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. அந்த மூலிகைகள் வழியாக உருவாகும் நீரே இந்த ஏழு கிணறுகளின் ஆதாரம் என பக்தர்கள் நம்புகின்றனர்.
மேலும், இந்த கோவிலில் உள்ள “காந்த தீர்த்தம்” எனப்படும் குளமும் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கிறது. இங்கு உப்பு, மிளகாய் போன்றவற்றை சுற்றி வைத்து வழிபட்டால் தீராத பிரச்சினைகளும் தீரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு திறந்திருக்கும். கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
Read more: ‘மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ ஆளுநர் மாளிகை வெளியிட்ட குறிப்பால் சர்ச்சை..!



