அதிமுகவில் உள் கட்சி மோதல் நீடித்து வரும் நிலையில் டெல்லி பாஜக தலைமை இந்த சூழ்நிலையை தீவிரமாக கவனித்து வருவதாகவும், விரைவில் நேரடி தலையீடு செய்யும் வாய்ப்பும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சிப் பொறுப்புகளில் நீக்கப்பட்ட செங்கோட்டையன், அடுத்த 10 நாட்களுக்குள் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படாவிட்டால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என எச்சரித்துள்ளார். “அனைவரையும் ஒன்றிணைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும்” என வலியுறுத்திய அவர், தனது கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பிரசாரத்தில் பங்கேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அமமுக தலைவர் டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் NDA-யிலிருந்து விலகிய நிலையில், தினகரனின் இந்த முடிவு கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. “பாஜக காரணம் இல்லை, தொண்டர்களின் முடிவினால் தான் விலகினோம்” என்று தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவின் முக்கிய இஸ்லாமிய முகமாக கருதப்பட்ட முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது, அதிமுகவுக்கு மேலும் சவாலாக மாறியுள்ளது. பாஜக கூட்டணிக்கு எதிராகவே அவர் நீண்டகாலமாகக் குரல் கொடுத்திருந்தார். இதனால், ஏற்கனவே அதிமுக மீது அதிருப்தியில் இருந்த இஸ்லாமிய வாக்காளர்களின் ஆதரவும் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
2016-க்குப் பிறகு தொடர்ச்சியாக தேர்தல்களில் அதிமுக தென் மாவட்டங்களில் பெரிய சரிவை சந்தித்துள்ளது. முக்குலத்தோர் ஆதரவு வாக்குகள் ஏற்கனவே விலகிய நிலையில், இஸ்லாமியர்களின் ஆதரவும் குறைந்து வருகிறது. இதனால், தென் மண்டலத்தில் அதிமுகவின் நிலைமை கவலைக்கிடமாக மாறி உள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழ்நிலையில், டெல்லி பாஜக தலைமை நேரடியாக தலையிட்டு சமரச முயற்சிகள் மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும் அதிமுகவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக மாறியுள்ளது. குறிப்பாக தென் மண்டலத்தில் மீண்டும் நிலைபெறுவதற்கு முன்பே, அங்கே அதிமுக மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.
Read more: மாதம் ரூ.5000 முதலீடு செய்தால் ரூ.8 லட்சம் கிடைக்கும்.. அட்டகாசமான போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்..!!