அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் ‘டித்வா’ புயல் நாளை அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக, டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுகிறது. பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் வருடாந்திர காலஅட்டவணையின்படி நவம்பர் 29 சனிக்கிழமை விடுமுறை நாள் ஆகும். அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று விடுமுறை நாள்தான். அதேநேரத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில் வகுப்பு இருக்கலாம் என்பதை கருத்தில்கொண்டு பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.



