திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மர்ம நபர்கள் சிலர் மலம் கழித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டிகளும் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வேடசந்தூர் அருகே நல்லமனார்கோட்டை ஊராட்சி தொட்டனம்பட்டி கிழக்குத் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50அடி உயரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
தொட்டி முழுவதுமாக கட்டப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் குழாய் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் மேலே ஏறி தொட்டிக்குள் இறங்கி உள்ளே மலம் கழித்து அசுத்தம் செய்துள்ளனர். மேலும் தொட்டிக்குள் மது அருந்திய பிளாஸ்டிக் கப், பீடி புகையிலை உள்ளிட்ட பொருட்களும் கிடந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள், இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஊராட்சி நிர்வாகம் சார்பாக ப்ளீச்சிங் பவுடர் மட்டுமே தெளிக்கப்பட்டது. எனவே தண்ணீர் தொட்டியில் மலம் கழித்து அசுத்தம் செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மூவேந்தர் புலிப்படை சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த தவறை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Read more: வரலாற்றில் இன்று!. உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!. பின்னணி என்ன?