திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை மருத்துவர்களான இரு சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இதில் அவர்களது மனைவிகளும் மருத்துவர்களாக உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சகோதரர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையை யார் நிர்வகிப்பது என்ற பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெண் மருத்துவரான அழகாநந்தா என்பவர் திடீரென மருத்துவமனையின் மூன்றாவது தளத்திற்கு சென்று அங்கிருந்த செவிலியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பொது வார்டு கதவின் கண்ணாடிகளை உடைத்து, நோயாளிகள் மீது ஒருவித ஸ்பிரேயை அடித்துள்ளார். ஸ்பிரே அடிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள் மூன்றாவது தளத்தைவிட்டு அலறியடித்து வெளியே ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செவிலியர்களும் துப்பட்டாவால் மூக்கை அடைத்துக்கொண்டு வெளியேறினர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெண் மருத்துவர் அழகாநந்தா போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் தொடர்பாக மற்றொரு மருத்துவர் மோகனசுந்தரி என்பவர் அழகாநந்தா மீது மணப்பாறை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சொத்து பிரச்சனையால் பெண் மருத்துவரே மனநோயால் பாதிக்கப்பட்டவர் போல் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் மீது மர்ம ஸ்பிரே அடித்தும், கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : கோவை என்ன பாகிஸ்தானிலா இருக்கு..? தேசியக்கொடி ஏந்தி பேரணி செல்வது பாவச்செயலா? தவெக அரசை விளாசிய ஐகோர்ட்..!!



