மத்தியப் பிரதேசம் சிந்தவாரா மாவட்ட மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வார்மர் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு குழந்தைகள் தீக்காயமடைந்தனர்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் வார்மர் (குழந்தைகளுக்கான வெப்பமூட்டும் கருவி) இயந்திரத்தின் பிலமென்ட்டில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக இந்த விபத்து நேரிட்டது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகளைக் கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மாவட்ட மருத்துவமனை தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் காஞ்சன் துபே கூறுகையில், காயமடைந்த மூன்று குழந்தைகளுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஜபல்பூருக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார். அவர்களில் ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. சாவில்வாராவில் குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாததால், ஜபல்பூருக்கு மாற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்த விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவரான சிவானி வர்மா மற்றும் ஆதித்யா வர்மா தம்பதியரின் குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தச் சம்பவத்திற்கு மத்தியப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கர் பாஜக அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், மருத்துவமனைகள் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவருவதாகக் குற்றம்சாட்டியதோடு, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடி தீயை அணைக்கும் பாதுகாப்புத் தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் மோகன் யாதவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



