வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்ன லுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 19 முதல் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 22-ம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திரா ஒரிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கொங்கன்-கோவா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், குஜராத் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடகா கேரளா கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியகிழக்கு – தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.