மூன்று பேரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிக்கு, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்காக 21 நாட்கள் பரோல் வழங்கக் கோரி மனைவி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துமணி என்பவர், 3 பேரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். தற்போது அவர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், முத்துமணியின் மனைவி தனது கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்புவதாகவும், செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற திட்டமிட்ட, தனது கணவருக்கு 21 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஆயுள் தண்டனை கைதிக்கு பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கைதிக்கு பரோல் வழங்கினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் உருவாகலாம் என்று காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முத்துமணியின் மனைவி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் தீர்ப்பில், “பரோல் என்பது கைதிக்கான உரிமை அல்ல; அது ஒரு சலுகை மட்டுமே” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். தமிழ்நாடு தண்டனை இடைநீக்கம் விதிகள், 1982-ன் கீழ், கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்க எந்த விதியும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
அத்துடன், “மூன்று பேரைக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் குழந்தை என்ற அடையாளத்துடன் பிறக்கும் குழந்தை சமூகத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்” என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் முக்கிய நோக்கம் கைதிகளை சீர்திருத்துவதே தவிர, அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்வது அல்ல என்றும் நீதிமன்றம் விளக்கம் அளித்தது.
Read more: 717 டாஸ்மாக் கடைகள் மூடல்..! தமிழக அரசுக்கு எவ்வளவு கோடி வருவாய் இழப்பு தெரியுமா..?



