தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்..
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் உடன் 25 ஆண்டுகாலம் பயணித்த பி.டி. செல்வக் குமார் திமுகவில் இணைந்தார்.. இவர் 2003-ம் ஆண்டு முதல் விஜய்க்கு மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர்.. விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தை பி.டி. செல்வக்குமார் தான் தயாரித்திருந்தார்.. இவர் கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருந்து வருகிறார்..
பிடி. செல்வகுமார் தலைமையிலான நூற்றுக்கணக்கானோர் இன்று திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் பிடி. செல்வக்குமார் திமுகவில் இணைந்தார்..
அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன், பிரபல மேடை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் சமீபத்தில் தவெகவில் இணைந்த நிலையில், விஜய்க்கு நெருக்கமான பிடி செல்வக்குமார் திமுகவில் இணைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. தவெகவில் அதிருப்தியில் உள்ள நூற்றுக்கணக்கானோர் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது..



