சவுதி அரேபியாவில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, ரியாத், ஜெட்டா, தம்மாம், மதீனா ஆகிய நான்கு முக்கிய நகரங்களுக்கான விமானச் சேவைகள் அக்டோபர் 24, 2026 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியத் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறிப்பிட்ட நான்கு நகரங்களுக்கான விமான ரத்து நடவடிக்கை அக்டோபர் 24-ம் தேதி உட்பட தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இண்டிகோ விமான நிறுவனமும் இதே நகரங்களுக்கான விமானச் சேவைகள் அக்டோபர் 24 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.
சவுதி அரேபியாவில் நிலவும் சூழலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, டிக்கெட் முன்பதிவின்போது வழங்கிய தொடர்பு விவரங்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. பயண முகவர்கள் அல்லது பிற பயணச் சேவை நிறுவனங்கள் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், அவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு உதவி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 10-ம் தேதி ரியாத் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – சவுதி அரேபியா இடையிலான விமானப் போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஏழு இந்தியர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், மற்றவர்கள் மருத்துவமனையின் வெவ்வேறு பிரிவுகளிலும் சிகிச்சை பெற்றனர். காயமடைந்த ஒருவருக்கு அக்டோபர் 15-ம் தேதி மருத்துவமனையிலிருந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
முன்னதாக, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் சவுதி அரேபியாவுக்கான விமானச் சேவைகளை அக்டோபர் 17 வரை நிறுத்துவதாக இந்தியத் தூதரகம் அறிவித்திருந்தது. தற்போது இந்த ரத்து காலம் அக்டோபர் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெட்டா, தம்மாம், மதீனா விமான நிலையங்களிலும் சில இடையூறுகளுடன் சேவைகள் நடைபெற்றன. சவுதியா விமான நிறுவனம் இந்த மூன்று நகரங்களிலிருந்து திட்டமிட்ட விமானங்களை இயக்கி வந்தது. தம்மாம் – லக்னோ இடையிலான விமானச் சேவையையும் ஃப்ளைனாஸ் நிறுவனம் தொடர்ந்து இயக்கியது.
அவசரமாக இந்தியா திரும்ப வேண்டியவர்கள், பஹ்ரைன், குவைத், கத்தார் உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியாகப் பயணிப்பதையும் பரிசீலிக்கலாம் எனத் தூதரகம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. எனினும், அந்த நாடுகளுக்குள் நுழைவதற்குத் தேவையான விசா உள்ளிட்ட அனுமதிகள் பயணிகளிடம் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வான்வழித் தாக்குதல் அல்லது ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான சூழல் ஏற்பட்டால், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறிக்கப்படும் காட்சிகள், அவை விழுந்த இடங்கள் தொடர்பான தகவல்களைப் படம் பிடிப்பது, வெளியிடுவது அல்லது பகிர்வது உள்ளூர் சட்டங்களின்படி சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.
ஜெட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகமும் விமானச் சேவை பாதிப்புகளால் சிரமங்களை எதிர்கொள்ளும் இந்தியர்களுக்கு உதவி வருகிறது. குறிப்பாக உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை ஜெட்டா மற்றும் மக்காவில் உள்ள குழுக்கள் வழங்கி வருகின்றன.
சவுதி அரேபியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள், விமான நிறுவனங்களின் சமீபத்திய அறிவிப்புகளைச் சரிபார்த்த பின்னரே பயணத்தைத் தொடர வேண்டும்.
Also Read: “எனக்கு அப்பா இல்லை”.. தாய்க்காக சிறுவன் செய்துவரும் செயல்.. மனதை உருக்கிய பெண்ணின் உதவி!



