தமிழகத்தில் பல இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது.. திறந்தவெளி இடங்கள், வீடுகளின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் இரவில் கனமழை பகலில் வெயில் என தட்ப வெப்பநிலை மாறி நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் சோர்வு, மாலைநேர குளிர், வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இந்தக் காய்ச்சல் எளிதில் குணமாவதில்லை. சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி பாதிப்பு தொடர்வதால், மர்ம காய்ச்சல் பரவுகிறதோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சென்னையில் மட்டும் தினமும் பல்வேறு வகை காய்ச்சலால், 1000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு, டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளாக இருக்கலாம், எனவே கவனமாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். திறந்தவெளி இடங்கள், வீடுகளின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல் போன்றவைகளின் வாயிலாக பாதிப்புகளை தவிர்க்கலாம்.