சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 6.25 லட்சமாக இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2026 ஆகஸ்ட் மாதத்தில் 10.6 சதவீதம் அதிகரித்து சுமார் 6.91 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தத் திடீர் உயர்வுக்கு பங்களாதேஷ் நாட்டின் சுற்றுலாப் பயணிகளே முக்கியக் காரணமாக அமைந்துள்ளனர். அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் 74,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட சுமார் 80 சதவீதம் அதிகமாகும்.
சீனாவில் இருந்தும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 2025 ஆகஸ்ட் மாத நிலவரத்தை விட, 2026 ஆகஸ்ட் மாதத்தில் சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து 9,000-ஐத் தாண்டியுள்ளது.
அதேசமயம், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற பாரம்பரிய மேலைநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை 3 சதவீதம் மட்டுமே உயர்ந்து மிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கனடா, ஜெர்மனி, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வருகை தருபவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு தடைகளைச் சந்தித்த பங்களாதேஷ் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவின் சுற்றுலாத் துறை மீட்புப் பாதை, வழக்கமான பாரம்பரிய நாடுகளை மட்டும் சார்ந்து இல்லை என்பதைக் காட்டுகிறது.
இது குறித்து சுற்றுலா கொள்கை சார்ந்த ‘அதிதி அறக்கட்டளையின்’ (Atithi Foundation) முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) ஹேமந்த் ஜோஷி பேசுகையில், “இந்த எண்கள் மிகவும் உற்சாகமளிப்பதாகவும், இந்தியாவின் சுற்றுலா வரைபடம் விரிவடைந்து வருவதைக் காட்டுவதாகவும் உள்ளது. இருப்பினும், ஒரே ஒரு மாதத் தரவைக் கொண்டு மட்டுமே இது ஒரு பெரிய நிரந்தர மாற்றம் என்று முடிவுக்கு வந்துவிட முடியாது” என எச்சரித்துள்ளார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாது, அவர்கள் இந்தியாவில் தங்கும் நாட்களின் அளவு, அவர்கள் செலவிடும் தொகை மற்றும் அந்தச் செலவுகள் எந்தெந்த இடங்களுக்குச் சென்றடைகின்றன என்பவையே சுற்றுலாத் துறையின் உண்மையான மதிப்பைக் கூட்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்தியாவிற்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள், வழக்கமான குறிப்பிட்ட நகரங்களோடு நின்றுவிடாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நீண்ட நாட்கள் தங்கிச் செலவிடும் வகையில் ஊக்குவிப்பதே சுற்றுலாத் துறையை மேலும் விரிவுபடுத்துவதற்கான பெரிய வாய்ப்பாகும்” என்றும் ஹேமந்த் ஜோஷி தெரிவித்துள்ளார்.



