தமிழ்நாட்டின் முக்கிய மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் பகுதியில் கோடை விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் முக்கிய அறிவிப்பை வனத்துறை வெளியிட்டுள்ளது.
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு இன்று முதல் இந்த மாதம் 31ஆம் தேதி வரை இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட பிரபல சுற்றுலா இடங்களுக்கு கட்டணமின்றி செல்லலாம்.
முன்னதாக, 2026 மே மாத தொடக்கத்தில், வனத்துறைக்கு உட்பட்ட சுற்றுலா மையங்களில் புதிய நுழைவுக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே இடத்தில் கியூஆர் குறியீடு மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் போராட்ட சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அவசர ஆலோசனை நடத்தி, மே 2 மற்றும் மே 3 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களுக்கு வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு இலவச அனுமதி வழங்கியது. இந்த தற்காலிக நடவடிக்கை சுற்றுலாப் பயணிகளின் சிரமத்தை குறைத்ததோடு, உள்ளூர் வாகன ஓட்டுநர்களின் எதிர்ப்பையும் சமாளிக்க உதவியது.
பின்னர் மே 4ஆம் தேதி முதல் மீண்டும் கியூஆர் குறியீடு அடிப்படையிலான கட்டண முறை நடைமுறைக்கு வந்தது. தற்போது மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் விஜயின் உத்தரவின்படி இந்த இலவச அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் கோடை விடுமுறையை கொண்டாட கொடைக்கானல் செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Read more: தவெக அரசு கொண்டாட்ட மனநிலையில் இருந்து வெளிவர வேண்டும்.. வீடியோ ஆதாரத்துடன் விளாசிய அண்ணாமலை..!



