அசாம் அரசு இன்று, பொது சிவில் சட்டம் (UCC) தொடர்பான ஒரு மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.. இது பலதார மணத்தைத் தடை செய்யவும், திருமணத்திற்கு முந்தைய இணைவாழ்வு (live-in relationships) உறவுகளைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கவும் கோருகிறது.
முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா சார்பாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அதுல் போரா, ‘அசாம் பொது சிவில் சட்ட மசோதா, 2026’-ஐ சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அசாம் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த UCC மசோதாவின்படி, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் இணைவாழ்வு உறவுகள் தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
“திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் இணைவாழ்வு உறவுகளை நிர்வகிக்கும் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்துவதே இம்மசோதாவின் குறிக்கோளாகும்,” என்று சர்மா, இம்மசோதாவில் இடம்பெற்றுள்ள ‘நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான விளக்க அறிக்கையில்’ குறிப்பிட்டுள்ளார். திருமணத்தைப் பொறுத்தவரை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முறையே 21 மற்றும் 18 வயதை குறைந்தபட்ச வயது வரம்பாக இம்மசோதா நிர்ணயிக்கிறது; மேலும், பலதார மணத்தையும் இது தடை செய்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“முதன்முறையாக, லிவ்0ன் உறவுகளுக்கு ஒரு சட்டரீதியான கட்டமைப்பை இம்மசோதா வழங்குகிறது. இத்தகைய உறவுகளைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குவதன் மூலம், அதில் ஈடுபட்டுள்ள இணையர்களின் உரிமைகளும், அந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளின் உரிமைகளும் முறையாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதை இச்சட்டம் உறுதி செய்கிறது,” என்று முதலமைச்சர் இம்மசோதாவில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அசாமில் வசிக்கும் பட்டியல் பழங்குடியினத்தவர் எவருக்கும் இம்மசோதா பொருந்தாது என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.



