பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அணுகுமுறையில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பயங்கரவாதத்துக்கு எதிராக ‘ஜீரோ டாலரன்ஸ்’ கொள்கையை இந்தியா பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கையும் அவர் தனது உரையில் நினைவுகூர்ந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 138-வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதை அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை நடைபெற்று 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதை இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையில் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். கட்டுப்பாட்டு கோட்டை (LoC) கடந்து இந்திய வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கை உலக அளவில் கவனத்தை ஈர்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தாக்குதல்களால் இந்தியா நீண்ட காலமாக சந்தித்த பாதிப்புகளுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒரு தீர்க்கமான பதிலாக அமைந்ததாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் பாலகோட் வான்வழித் தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை இந்தியா தனது பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறையை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக இந்தியாவில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் நடைபெற்ற காலகட்டத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். 2008-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளையும், அதன்பிறகு அதே ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற காலங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்ததாகவும், ஆனால் அவற்றில் போதிய கவனம் செலுத்தப்படாமல் காலம் கடந்து செல்லும் நிலை இருந்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். தற்போது பயங்கரவாதத்துக்கு எதிராக ‘ஜீரோ டாலரன்ஸ்’ கொள்கையை இந்தியா பின்பற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 பயங்கரவாதத் தாக்குதலின் 25-வது ஆண்டு நிறைவையும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2014-ம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது தான் அஞ்சலி செலுத்தியதை நினைவுகூர்ந்த அவர், பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்தார்.
Also Read: பன்னீர் அதிக வெள்ளையாக இருந்தால் ஆபத்தா? வாங்கும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!



