விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது இன்று வட தமிழகம் – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது.
தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வேளாண்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கணக்கெடுக்கப்படும் பயிர் பாதிப்பு, விதை, உரம் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள் இருப்பு, சம்பா நெற்பயிருக்கான பயிர்க்காப்பீடு குறித்து மாவட்ட வேளாண்மை இணைஇயக்குநர்கள், தோட்டக்கலை துணை இயக்குநர்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்யவும், பயிர் வாரியான வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்தும் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
அந்தந்த பகுதியில் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி துறையால் எடுக்கப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துரைக்க வேண்டும். துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைப்புடனும், முனைப்புடனும் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.



