வீடு புகுந்து A+ ரவுடியின் கதையை முடித்த கும்பல்..!! சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Crime 2026

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்காவலன் (வயது 31). இவர் மீது சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல், திருட்டு, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல், தாக்குதல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அவற்றில் 3 கொலை வழக்குகள் மற்றும் 2 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். இதனால் அவர் A+ வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக போலீஸ் கண்காணிப்பில் இருந்து வந்தார்.


ஊர்காவலனின் சகோதரர் பிரசாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில், 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை கொலை வழக்கிலும் ஊர்காவலன் முக்கிய குற்றவாளியாக தொடர்புடையவர் என கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம், மானாமதுரை காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஊர்காவலனை கைது செய்ய முயன்றபோது, அவர் அரிவாளுடன் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக அவரது வலது காலில் துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் கைது செய்தனர். காயமடைந்த அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சுமார் மூன்று நாட்களுக்கு முன்புதான் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார். இந்த நிலையில், மாத்தூரில் உள்ள தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஊர்காவலனை, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த ஊர்காவலன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர், கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பாச்சேத்தி போலீசார், உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு முக்கிய தடயங்களை சேகரித்தனர். முன்விரோதம், பழிக்குப் பழி அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : அதே 3ம் தேதி..!! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த முக.ஸ்டாலின்..!!

You May Like