மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பர்கி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு புயலால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 29 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 2 பணியாளர்களுடன் சென்ற படகு, திடீரென வீசிய பலத்த காற்றில் சிக்கி கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட உடனே துரித மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 10 சுற்றுலாப் பயணிகள் இன்னும் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், திடீரென வீசிய புயல் காரணமாக நீர் கொந்தளித்து, படகு ஆடித்தள்ளப்பட்டதாகவும், கரை நோக்கி திரும்புமாறு பயணிகள் கேட்டபோதும், அந்த முயற்சி பலனளிக்காமல் படகு அணையின் நடுப்பகுதியில் கவிழ்ந்ததாகவும் தெரிவித்தனர்.
சம்பவத்துக்குப் பின்னர் State Disaster Response Force (SDRF) குழுக்கள் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் முகாமிட்டு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முழு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read more: சிகரெட் பிடிப்பவர்களுக்கு பெரும் ஷாக்..! மே மாதத்தில் மீண்டும் விலை உயரப்போகிறது..!



