2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309-ன்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்பப் பெற வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தி, புதிய ஓய்வூதியத்தினை ரத்து செய்வோம் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், 4 ஆண்டு ஆட்சி கலாம் முடிந்தும் அதைப்பற்றி பேசாமல் ஒரு குழுவினை அமைத்தனர். அதுமட்டுமின்றி, 110 விதியின் கீழ், அந்த குழுவின் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே அறிக்கைகள் சமர்ப்பிக்க உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய ஐஏஎஸ் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்த குழு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையில் அரசு ஊழியர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செப்டம்பர் மாதத்துக்குள் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அரசு அமைத்த குழு பல்வேறு ஆய்வுகள் மற்றும் தரவுகளை சேகரித்து, இது தொடர்பான அறிக்கையை கிட்டத்தட்ட நிறைவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே இந்த அறிக்கை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட இருக்கும் நிலையில் அம்மாத இறுதிக்குள் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலில் அரசு ஊழியர்களின் ஆதரவை பெற இந்த முடிவை முதலமைச்சர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.