காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டிருந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்குச் சாதகமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 30-ஆம் தேதி வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டும் கர்நாடக அரசு அதனைச் செயல்படுத்தாததால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழகம் தனது வாதங்களை வலுவாக முன்வைத்தது.
டெல்லியில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பு வாதங்களும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டன. இதையடுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆணையம், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு நாள்தோறும் வினாடிக்கு 9,000 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களில் சுமார் 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



