கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ் (41). இவர், லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பேத்தி முறையில் உள்ள இவரது உறவினரான 17 வயது சிறுமி தனியார் கல்லுாரியில் பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் தனியாக இருந்த மாணவியை கோவிந்தராஜ் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.
கடந்த 21ஆம் தேதி இரவு மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் குறை பிரசவத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, தகவல் அறிந்த ஓசூர் அனைத்து மகளிர் போலீசார், மாணவியிடம் விசாரித்தபோது, உறவினரான லாரி டிரைவர் கோவிந்தராஜ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் கோவிந்தராஜை போலீசார், கைது செய்தனர். விசாரணையில், கோவிந்தராஜிற்கு திருணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அவருக்கு பேத்தி முறை என்பதும் தெரிய வந்துள்ளது.



