பின்லாந்து நாட்டில் புதிய தரவு மையங்களை (Data Centres) அமைப்பதற்காக, உரிய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் பல நூறு ஹெக்டேர் பரப்பளவிலான காடுகளை கூகுள் நிறுவனம் அழித்ததாக எழுந்த சர்ச்சை அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முகோஸ் (Muhos) பகுதியில் சுமார் 330 ஹெக்டேர் மற்றும் கஜானி (Kajaani) பகுதியில் சுமார் 200 ஹெக்டேர் அளவிலான காடுகளும், 2.5 லட்சம் மரங்களும் அழிக்கப்பட்டதாக தெரியவந்ததை அடுத்து, கூகுள் நிறுவனத்தின் பின்லாந்து பிரிவு தலைவர் ஆன்டி ஜார்வினென் இந்த விவகாரத்திற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
முன்னதாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு ஏதுமின்றி சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாக பின்லாந்து இயற்கை பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்தது. இதனையடுத்து அந்நாட்டு கண்காணிப்பு முகமை தலையிட்டு பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை கிளப்பிய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கூகுள் அதிகாரி ஆன்டி ஜார்வினென், அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் சட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றியே முதற்கட்ட பணிகளை முன்னெடுத்ததாகவும், எனினும் இத்தகைய விரும்பத்தகாத சூழல் உருவானதற்காக தாங்கள் முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்பதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும், பூர்வாங்க பணிகளுக்கான அனுமதியை வழங்குமாறு கூகுளின் வழக்கறிஞர்கள் தங்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததாக முகோஸ் நகராட்சி கட்டிட ஆய்வாளர் கூறிய குற்றச்சாட்டை ஜார்வினென் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சுற்றுச்சூழல் ஆய்வு விதிகளை கடந்து பணிகளை அவசரகதியில் முடிக்கவோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்த அழுத்தத்தினால் செயல்படவோ இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஏற்கனவே ஹமினா மற்றும் வாலா ஆகிய பகுதிகளிலும் திட்டங்களை செயல்படுத்தி வரும் கூகுள் நிறுவனம், பின்லாந்தில் சுமார் 13 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள சூழலில், காடுகள் அழிக்கப்பட்ட விவகாரம் அந்நாட்டில் தொழில்நுட்ப நிறுவனங்களின் சுற்றுச்சூழல் விதிமீறல்கள் குறித்த புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
Read More : ஆசிய விளையாட்டில் அசத்திய தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்! ரூ.1.25 கோடி பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!



