மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “இன்னும் 4 மாதங்களுக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக பேசியுள்ளார். அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள இந்த இரு தொகுதிகளின் தேர்தலில் தவெகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்றும், அதிமுக ஆட்சிக்கு வரும் சூழலில் கலசப்பாக்கம், செங்கம் தொகுதிகளை முன்மாதிரி தொகுதிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை அவர் விமர்சித்தார். குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பிய அவர், ஆட்சி அமைந்து நான்கரை மாதங்கள் கடந்தும் அந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை என குற்றம்சாட்டினார்.
அதேபோல், குடும்பங்களுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியில் இருந்து பின்வாங்கி, தற்போது 3 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என மாற்றியுள்ளதாகவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்தார்.
தவெக ஆட்சிக்கு நீண்ட காலம் நீடிக்காது என்றும், அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என்றும் அவர் தனது பேச்சில் தெரிவித்தார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், இடைத்தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்து வரும் சூழல் உருவாகியுள்ளது. அதிமுக சார்பில் முன்வைக்கப்படும் ஆட்சி மாற்றம் குறித்த கருத்துகளும், தவெக அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களும் தற்போது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய பேசுபொருளாகியுள்ளன.
Also Read: “நீ வேண்டாம்.. உங்க சித்திதான் வேணும்!” மனைவியின் 45 வயது சித்தியை திருமணம் செய்ய பிடிவாதம் பிடித்த இளைஞர்…



