இ-கேஒய்சி செய்யவில்லையா? நாளை முதல் ரேஷன் பொருட்கள் நிறுத்தம்..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Ration Shop 2026

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது விரல் ரேகை அல்லது கருவிழிப் பதிவு மூலம் ‘இ-கேஒய்சி’ (e-KYC) சரிபார்ப்பை முடிக்காவிட்டாலும், அவர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தகுதியுள்ள எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் மாதாந்திர அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை நிறுத்தவோ அல்லது விநியோகிக்க மறுக்கவோ கூடாது என அனைத்து மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களுக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, கடந்த ஆறு மாதங்களாகப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் இந்த உத்தரவு அட்டைதாரர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

மாநிலத்தில் இ-கேஒய்சி பணிகளை விரைவுபடுத்துவதற்காகக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி மே 10, ஆகஸ்ட் 2, 8, 9, 29 மற்றும் செப்டம்பர் 19, 26 ஆகிய தேதிகளில் மாநிலம் தழுவிய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் பயனாக, முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்ட அட்டைதாரர்களிடையே, கடந்த ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த இ-கேஒய்சி பதிவு, செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி 96.69 சதவீதமாகக் கணிசமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், இதுவரை ரேஷன் கடைகளில் தங்களது கருவிழி அல்லது கைரேகைப் பதிவை மேற்கொண்டு தகவல்களைச் சரிபார்க்காத எஞ்சிய குடும்ப அட்டைதாரர்கள், எதிர்காலச் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு விரைந்து இ-கேஒய்சி நடைமுறைகளை நிறைவு செய்யுமாறு உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Read More : பணியின் போது அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்? தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

You May Like