திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் மீது பால் வேன் மோதிய பயங்கர விபத்தில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது வீட்டின் முன்பாக அவரது மனைவி அஞ்சம்மாள் (60) அமர்ந்திருக்க, அருகிலேயே அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த பால் ஏற்றிச் செல்லும் மினி வேன், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் நாகராஜ் என்பவரது மகள்களான யோகவர்ஷினி (11), அனன்யா (6) ஆகிய இருவரும், அவர்களது உறவினர் ஜெகதீசனின் மகள் தனுஸ்ரீ (5) மற்றும் சின்னத்தம்பியின் மகன் மோசிகரன் (6) ஆகிய 4 குழந்தைகளும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். கண் முன்னே நிகழ்ந்த இந்தக் கோரக் காட்சியைக் கண்டு மூதாட்டி அஞ்சம்மாள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
விபத்தை ஏற்படுத்திய வேன் நிற்காமல் சென்ற நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை காவல் துறையினர், உயிரிழந்த 4 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய பால் வேனைப் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோட முயன்ற ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வேன் டிரைவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
Read More : முல்லைப்பெரியாறு அணை உடையப் போகுதா? கேரள மாநிலமே அழியும் அபாயம்..!! தமிழக விவசாயிகள் எச்சரிக்கை..!!



