உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களின் தொடர் கள ஆய்வுகள் மூலம் முல்லைப் பெரியாறு அணை முழுமையான பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும், அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்ற ரீதியில் ஏ.ஐ. (AI) தொழில்நுட்ப வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே தொடர் பீதியை உருவாக்கி வரும் கேரள யூடியூபர்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை மூலம் கடுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1895-ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த முல்லைப் பெரியாறு அணை, 999 ஆண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக நீர்வளத்துறையினரால் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் தண்ணீரை மட்டுமே நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் சுமார் 2.57 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி கேரள அரசியல்வாதிகள் ஏற்படுத்திய தொடர் முட்டுக்கட்டைகளுக்கு பிறகு, தற்காலிகமாக 136 அடியாக குறைக்கப்பட்ட நீர்மட்டத்தை, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல கட்டங்களாக பலப்படுத்தப்பட்ட பின்னரும் உயர்த்த கேரளா தொடர்ந்து மறுத்து வந்தது.
இதனையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களின் பயனாக, கடந்த 2006 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நிபுணர் குழுக்களின் பாதுகாப்பு அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாகத் தேக்கலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்திய பின் முழு கொள்ளளவான 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது.
அந்த உத்தரவுகளின்படி தமிழக அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 142 அடி வரை நீரைத் தேக்கி நடைமுறைப்படுத்திய போதும், அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் கேரளாவில் சிலர் தொடர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சமீப நாட்களாகச் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை பரப்பி இரு மாநில மக்களிடையே பதற்றத்தை விளைவிக்கும் சமூக விரோத சக்திகள் மீது சட்டப்படி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
Read More : பிரபல ரவுடி கொடூர கொலை..! ரத்த வெள்ளத்தில் சுடுகாட்டில் கிடந்த சடலம்..! சென்னையில் அடுத்த பயங்கரம்..!



