தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் ஈரப்பதமான காற்றின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை மழை பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் மழை தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: ராமர் பூவுலகை விட்டுச் சென்ற பிறகு அனுமன் என்ன ஆனார்..? பலருக்கும் தெரியாத ஆன்மிக ரகசியம்..!



