தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் அதனுடன் கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனுடன் தெற்கு உள்கர்நாடகா வரை மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் வழியாகக் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5.8 கி.மீ உயரம் வரை வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை ஒன்று நீடிக்கிறது. மேலும், தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் 0.9 கி.மீ உயரத்தில் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலவி வருகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (செப்.21) பரவலாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி ஆகிய 21 மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி பகுதியிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல், தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Read More : ஒரே ஊரில் பெஞ்ச் தேய்க்கும் அரசு ஊழியர்களுக்கு செக்..! சாட்டையை சுழற்றும் தவெக அரசு..!



