15 வயதுக்கு மேற்பட்டவர்களில் குறைந்தது 95% பேர் படிக்க, எழுத, அன்றாட வாழ்வில் தேவையான அடிப்படை கணிதப் பணிகளைச் செய்யத் தெரிந்தால் அந்த மாநிலம் முழு கல்வியறிவு பெற்றதாக கருதப்படும். இந்த அளவுகோலை பூர்த்தி செய்து, ஹிமாச்சலப் பிரதேசம் இந்தியாவின் நான்காவது முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கு முன்னர், மிசோரம் (98.2%), கோவா (99.5%) மற்றும் திரிபுரா (95.6%) மாநிலங்களும், லடாக் யூனியன் பிரதேசமும் (97%) உல்லாஸ் திட்டத்தின் கீழ் முழு கல்வியறிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தன.
உல்லாஸ் திட்டம்: “Understanding Lifelong Learning for All in Society (ULLAS)” எனப்படும் மத்திய நிதியுதவி கல்வியறிவு திட்டம் 2022–27 காலக்கட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிப்படிப்பு தவறிய 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கல்வி அளிப்பதே இதன் நோக்கம். 29.7 மில்லியன் கற்றலாளர்களும், 4.5 மில்லியன் தன்னார்வலர்களும் இதில் பங்கேற்கின்றனர். 26 இந்திய மொழிகளில் டிஜிட்டல் பாடப்பொருள்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் மொபைல் ஆப்ஸ்கள் மூலமாக வழங்கப்படுகின்றன.
முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறியதாவது: “நமது மாநிலத்தில் கல்வியறிவு விகிதம் 99.3% ஆக உயர்ந்துள்ளது, இது தேசிய அளவுகோலை மிஞ்சுகிறது. மாணவர்-ஆசிரியர் விகிதத்தில் ஹிமாச்சல் நாடு முழுவதும் முதலிடம் வகிக்கிறது.” என பெருமிதம் தெரிவித்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “எழுத்தறிவு என்பது வாசிப்பும் எழுதுதலும் மட்டுமல்ல; அது கண்ணியமும் தன்னம்பிக்கையும் அளிக்கும் கருவி. இந்தியாவின் கல்வியறிவு விகிதம் 2011 இல் 74% இருந்தது, தற்போது (2023-24) 80.9% ஆக உயர்ந்துள்ளது என்றார்.
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் (MoS) ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தபடி, உல்லாஸ் திட்டம் மூன்று முன்னுரிமைகளில் கவனம் செலுத்துகிறது.
தன்னார்வத் தொண்டு நிலைநிறுத்துதல்: கற்றலை விரும்பும் அனைவரும் தன்னார்வத் தொண்டர்களாக செயல்பட்டு, கல்வியறிவை சமூகத்தில் பரப்பும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
உடனடி நன்மைக்காக எழுத்தறிவை திறன்கள் மற்றும் வாழ்வாதாரங்களுடன் இணைத்தல்: படிக்கும் மற்றும் எழுதும் திறன்களை தினசரி வாழ்க்கைத் திறன்கள் மற்றும் வாழ்வாதாரச் சவால்களுடன் இணைத்துக் கொண்டு, கல்வியறிவின் பயன்களை உடனுக்குடன் அனுபவிக்கலாம்.
டிஜிட்டல், நிதி மற்றும் குடிமை விழிப்புணர்வுடன் கூடிய எழுத்தறிவை விரிவுபடுத்தல்: கல்வியறிவை டிஜிட்டல் முறைகளில், நிதி அறிவு மற்றும் குடிமை விழிப்புணர்வுடன் இணைத்து விரிவாக வழங்குதல்.
Read more: ஆம்லெட் vs வேகவைத்த முட்டை: வெயிட் லாஸ்க்கு எது சிறந்தது? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!