இல்லத்தரசிகளை ‘தேசத்தை உருவாக்குபவர்கள்’ என்று அங்கீகரித்த உச்சநீதிமன்றம், ஊதியம் பெறாத வீட்டு வேலைகளின் பொருளாதார மதிப்பையும் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பான முக்கிய தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது..
வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில், வீட்டுப் பராமரிப்புச் சேவைகள் இழப்பை ‘தனிப்பட்ட இழப்பீட்டுத் தலைப்பாக’ (distinct head of compensation) கருத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த இழப்பைக் கணக்கிடுவதற்கு மாதத்திற்கு ரூ. 30,000 என்ற வருமானத்தை’ (notional income) நிர்ணயம் செய்தது.
இல்லத்தரசிகள் ‘தேசத்தை உருவாக்குபவர்கள்’ என அங்கீகாரம்
நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோட்டிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இல்லத்தரசிகளின் பங்களிப்பு என்பது வெறும் வீட்டு வேலைகளுக்கு அப்பாற்பட்டது என்றும், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் இறுதியில் தேசத்தை உருவாக்குவதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்றும் தெரிவித்தது.. முறையான ஊதியம் ஈட்டவில்லை என்பதற்காக மட்டும், ஊதியம் பெறாத வீட்டு உழைப்பை பொருளாதார ரீதியாக முக்கியமற்றது என்று ஒதுக்கிவிட முடியாது என்பதை வலியுறுத்திய நீதிமன்றம், “இல்லத்தரசிகள் குடும்பத்திற்குப் பங்களிக்கிறார்கள். அவர்கள் தேசத்தை உருவாக்குபவர்கள். அவர்கள் தேசத்தைக் கட்டமைக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டது…
நீதிபதி கரோல் “இல்லத்தரசி ஒரு தனிமனிதனின் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறார் என்ற கருத்தை நாங்கள் கொண்டுள்ளோம். இல்லத்தரசி தேசத்தை உருவாக்குகிறார். எனவே நாங்கள் சில கொள்கைகளை வகுத்துள்ளோம்; தேசத்தை உருவாக்கும் இல்லத்தரசியின் வீட்டுப் பராமரிப்புச் சேவை இழப்பிற்கான குறைந்தபட்ச மாத வருமானத்தை ரூ. 30,000 என நிர்ணயித்துள்ளோம்.” என்று தெரிவித்தார்..
இந்த தீர்ப்பானது, ஊதியம் பெறாத உழைப்பாகக் கருதப்பட்டாலும் இல்லத்தரசிகளின் பணியின் பொருளாதார மதிப்பை அங்கீகரித்த முந்தைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளான ‘கீர்த்தி எதிர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்’ (2021) மற்றும் ‘அருண் குமார் அகர்வால் எதிர் நேஷனல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்’ (2010) ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.
வீட்டுப் பராமரிப்பு இழப்பிற்குத் தனி இழப்பீடு
‘வீட்டுப் பராமரிப்பு இழப்பு’ என்பதை கூடுதல் மற்றும் தனிப்பட்ட இழப்பீட்டுத் தலைப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இல்லத்தரசிகளின் கடின உழைப்பைத் திறன்மிக்க மற்றும் திறன் குறைந்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்திற்கு இணையாகக் கருதும் நடைமுறையின் அடிப்படையில், இந்த இழப்பைக் கணக்கிட மாதத்திற்கு ரூ. 30,000 என்ற குறைந்தபட்ச கருத்தியல் வருமானத்தை நீதிமன்ற அமர்வு நிர்ணயித்தது.
பஞ்சாபில் நடந்த வாகன விபத்து இழப்பீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.. இதில் உயிரிழந்த இல்லத்தரசியின் குடும்பத்தினர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இழப்பீடு கோரி வந்தனர். இத்தகைய விவகாரங்களில் ஏற்படும் தாமதம் குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம், வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் பொதுவாக ஓராண்டுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியது.
மேலும், அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் இவ்வழக்குகள் சரியான நேரத்தில் முடிவடைவதை உறுதிசெய்யும் வகையில் கண்காணிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தது. மோட்டார் வாகன விபத்து தொடர்பான சட்ட நடைமுறைகளில் நியாயமான இழப்பீடு என்ற கோட்பாட்டை வலுப்படுத்துவதன் மூலம், இந்தத் தீர்ப்பு மேலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



