கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டை சேர்ந்த 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே உள்ள பனம்பரிக்குன்னு பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு 11:40 மணியளவில் பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்ற கார், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதியது. சாலைப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் திண்டுக்கலில் உள்ள பி.எஸ்.என்.ஏ (PSNA) பொறியியல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் பயணித்த கார் மதுரை பதிவு எண் கொண்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டை மூலம் மாணவர்களின் கல்லூரி விவரம் உறுதி செய்யப்பட்டது.
மோதிய வேகத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து போனதால், மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து காரின் பாகங்களை வெட்டி எடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 7 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மற்றொரு மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் பலியான மாணவர்களின் முழு விவரங்களையும் கண்டறியும் பணியிலும், விபத்துக்கான சரியான காரணம் குறித்தும் அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



