இல்லத்தரசிகளுக்கும் வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கும் இடையே “யாருடைய வாழ்க்கை அதிகக் கடினமானது?” என்ற விவாதம் சமூகத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த கேள்விக்கான பதில் எளிதானதல்ல என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், இரு தரப்புப் பெண்களும் வெவ்வேறு விதமான உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான அழுத்தங்களை தினமும் எதிர்கொண்டு வருகின்றனர்.
புது டெல்லியில் உள்ள அப்பல்லோ ஒன் நிறுவனத்தின் உளவியலாளர் டாக்டர் அனுரீத் கவுர் கூறுகையில், இல்லத்தரசியாக இருப்பதோ அல்லது வேலைக்குச் செல்லும் தாயாக இருப்பதோ இரண்டிலும் வெளிப்படையாக தெரியாத பல பொறுப்புகள் உள்ளன. அவை பெண்களின் மனநலத்தையும் உடல்நலத்தையும் நீண்ட காலத்தில் பாதிக்கக்கூடும் என்றார்.
இல்லத்தரசிகள் எதிர்கொள்ளும் ‘கண்ணுக்கு தெரியாத’ சுமைகள்: பல இல்லத்தரசிகள் தங்கள் முழு நாளையும் குடும்பத்திற்காக செலவிடுகின்றனர். வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு, சமையல், குடும்பத் தேவைகள் என ஓய்வில்லாத பொறுப்புகளில் அவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஆனால் இந்த உழைப்பிற்கு பெரும்பாலும் அங்கீகாரம் கிடைப்பதில்லை.
இதனால் பல பெண்கள் தங்களின் சொந்த உடல்நலத்தை கவனிக்காமல் விடுகின்றனர். சோர்வு, உடல் வலி, தூக்கக் கோளாறு, மன அழுத்தம், எடை அதிகரிப்பு, உணர்ச்சி ரீதியான களைப்பு போன்ற பிரச்சனைகள் அவர்களிடம் அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக நிதி சுதந்திரமின்மை மற்றும் தனிப்பட்ட அடையாளம் இல்லாத உணர்வு, சிலருக்கு தனிமை, பதட்டம் மற்றும் குறைந்த சுயமதிப்பு போன்ற மனநல பாதிப்புகளையும் உருவாக்குகிறது.
வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் இரட்டை போராட்டம்: மற்றொரு புறம், வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகப் பொறுப்புகளையும் குடும்ப வாழ்க்கையையும் ஒரே நேரத்தில் சமநிலைப்படுத்த வேண்டிய சூழலில் இருக்கின்றனர். நீண்ட நேர வேலை, காலக்கெடு அழுத்தம், சரியான உணவுப் பழக்கமின்மை, போதிய ஓய்வு இல்லாமை போன்றவை அவர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கின்றன.
நாள்பட்ட மன அழுத்தம் காரணமாக உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு, ஒற்றைத்தலைவலி மற்றும் பதட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதோடு, “குழந்தைகளுக்கு போதிய நேரம் கொடுக்க முடியவில்லையோ?” என்ற குற்றவுணர்ச்சியும் பல வேலைக்குச் செல்லும் தாய்மார்களை அமைதியாக வதைக்கிறது.
மன அழுத்தத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்: “எரிச்சல், அடிக்கடி சோர்வு, தூக்கமின்மை, உடல் வலி, காரணமில்லாமல் அழுதல், உணர்ச்சி ரீதியான வெறுமை போன்றவை சாதாரண விஷயங்கள் அல்ல” என்று டாக்டர் அனுரீத் கவுர் எச்சரிக்கிறார். இவை நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி சோர்வின் முக்கிய அறிகுறிகளாக இருக்கக்கூடும் என அவர் கூறுகிறார். மனநல உதவி தேடுவதை பலவீனமாக பார்க்கக் கூடாது என்றும், ஆரம்பத்திலேயே ஆதரவு பெறுவது பெண்களின் நீண்டகால நலனுக்கு மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிறிய மாற்றங்களே பெரிய பலன் தரும்: “ஒரு பெண் வீட்டிற்குள் வேலை செய்தாலும், வெளியே வேலை செய்தாலும் இரு சூழல்களிலும் அவர் குடும்பத்திற்காக கண்ணுக்கு தெரியாத பல பொறுப்புகளைச் சுமக்கிறார். அதற்காக அவர் மரியாதைக்கும், கவனிப்பிற்கும், அன்பிற்கும் தகுதியானவர்,” என்று டாக்டர் அனுரீத் கவுர் கூறியுள்ளார். பெண்கள் தங்களின் உடல் மற்றும் மன நலத்திற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கும் போது, அது முழு குடும்பத்தின் உணர்ச்சி ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
Read more: எபோலா வைரஸ் எதிரொலி.. இந்தியா வரும் பயணிகளுக்கு டெல்லி விமான நிலையம் அவசர அலர்ட்..!



