இன்றைய காலத்தில் அறிவியல் வளர்ச்சி மனித வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. அதே நேரத்தில், சில நவீன பழக்கவழக்கங்கள் உடல்நலத்தில் எதிர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, குளிர்சாதனப் பெட்டி (Fridge) பயன்பாடு அதிகரித்த பிறகு, உணவுகளை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து மீண்டும் மீண்டும் சாப்பிடும் பழக்கம் அதிகமாகியுள்ளது.
பல வீடுகளில் சமைத்த உணவு மீதமிருந்தால், அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாள் மட்டுமல்ல, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகும் சூடாக்கி சாப்பிடும் நடைமுறை உள்ளது. இது தவறான சேமிப்பு அல்லது மீண்டும் மீண்டும் சூடாக்குதல் போன்ற காரணங்களால் சில நேரங்களில் உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம்.
ஆனால் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் குளிர்சாதனப் பெட்டி இல்லாத காலத்திலேயே உணவை சுத்தமாகவும், சுவையாகவும் தயாரித்தனர். மேலும், அம்மிக்கல், ஆட்டுக்கல்லில் குளிர்ந்த தன்மையே இருப்பதால் உணவு கெட்டு போகாமலும் சுவையாகவும் இருந்தது. விறகு அடுப்பில் மண்சட்டியில் சமைத்த உணவு தனித்துவமான மணத்தையும் சுவையையும் கொண்டிருந்தது. மேலும், இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், தானியங்களை பயன்படுத்தினர்.
இன்றோ, உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறையாலும், நேரப் பற்றாக்குறையாலும் ஒரே நேரத்தில் அதிகமாக சமைத்து, பல நாட்களுக்கு பயன்படுத்தும் பழக்கம் உருவாகியுள்ளது. மசாலாக்களை அரைக்க மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு, தயார் நிலையில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட மசாலாப் பொடிகளும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பது அவசியமானதாக இருந்தாலும், மீதமுள்ள சாம்பார், ரசம், பொரியல், குழம்பு போன்ற உணவுகளை பல நாட்கள் சேமித்து வைத்து மீண்டும் மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்ல பழக்கமாக கருதப்படுவதில்லை. குறிப்பாக, பிரியாணி போன்ற உணவுகளையும் பல நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் சூடாக்கி சாப்பிடும் பழக்கம் இன்று பரவலாக காணப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பு நிபுணர்களின் பரிந்துரையின்படி, சமைத்த உணவை சரியான முறையில் குளிர்வித்து, பாதுகாப்பாக சேமித்து, தேவையான காலக்கெடுவுக்குள் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். மேலும், மீண்டும் மீண்டும் சூடாக்குவதை முடிந்தவரை தவிர்ப்பதும் உடல்நலத்திற்கு நல்லது.
சமைத்த சிக்கன் அல்லது மட்டன் பிரியாணியை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 4°C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் சரியாக சேமித்து வைத்தால், பொதுவாக 1 முதல் 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக உணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சமைத்த ஒரு சில மணி நேரங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும். அதேபோல், மீன் அல்லது இறால் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிரியாணியை 1 முதல் 2 நாட்களுக்குள் சாப்பிடுவது சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது. காய்கறி பிரியாணியை சரியான முறையில் சேமித்து வைத்தால், 4 முதல் 5 நாட்களுக்குள் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
பிரியாணியில் பயன்படுத்தப்படும் அரிசி மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருட்களில் பாக்டீரியாக்கள் வளரக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சமைத்த உணவை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்காமல், விரைவாக குளிர்வித்து குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது மிகவும் முக்கியம். மேலும், சாப்பிடுவதற்கு முன்பு உணவை முழுமையாக சூடாக்கி பயன்படுத்துவதும் அவசியம்.
இருப்பினும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் பிரியாணியில் துர்நாற்றம், புளித்த சுவை, நிற மாற்றம் அல்லது பூஞ்சை போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதை எந்தக் காரணத்திற்கும் சாப்பிடக் கூடாது. அத்தகைய உணவை உடனடியாக அகற்றுவது பாதுகாப்பானது.
பொறுப்புத் துறப்பு: மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான உணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. தனிநபரின் உடல்நிலை, உணவு தயாரிக்கப்பட்ட முறை மற்றும் சேமிப்பு சூழல் ஆகியவற்றைப் பொறுத்து பாதுகாப்பு மாறுபடலாம். எனவே, சந்தேகம் இருந்தால் மருத்துவர் அல்லது உணவுப் பாதுகாப்புத் துறை நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
Also Read: இந்த டீ குடிங்க.. செரிமானம் முதல் நல்ல தூக்கம் வரை பல நன்மை இருக்கு!



