ஒடிசாவில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் தன்னுடன் வந்து சேரவேண்டும் என்று மூடநம்பிக்கையின் காரணமாக, இளைஞர் ஒருவரை தலையைத் துண்டித்துக் கொன்று, அவரது தலையை பூஜை அறைக்கு அடியில் புதைத்த திடுக்கிடும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சத்ருகன் சாகு (40) மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 18 முதல் காணாமல் போன 45 வயதான சந்தோஷ் கார்செல் என்பவரின் தலை இல்லாத உடல், கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து இக்கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. விசாரணையில், காணாமல்போன அன்று பாதிக்கப்பட்ட நபர் கடைசியாக சாகுவுடன் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சத்ருகன் சாகு, மது அருந்தியபோது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் காரணமாகவே கொலை நடந்ததாக ஆரம்பத்தில் வாக்குமூலம் அளித்தார்.
இருப்பினும், விசாரணை தீவிரமடைந்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்துக்கொள்வதற்காகவே தான் இக்கொலையைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், சாகுவின் வீட்டின் பூஜை அறைக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட நபரின் தலை தோண்டி எடுக்கப்பட்டது.
பலாங்கீர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிநாத் ஜி அவர்களின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 18 அன்று சந்தோஷ் கார்சலை உணவருந்த அழைப்பதாகக் கூறி தனது வீட்டிற்கு சாகு வரவழைத்துள்ளார். கார்செல் தூங்கிய பிறகு, சாகுவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அவரைத் தாக்கி தலையைத் துண்டித்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “ஆரம்பத்தில் காவல்துறையினரை திசைதிருப்பவே தலையை எறிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார். ஆனால், பூஜை அறையிலிருந்து தலை மீட்கப்பட்ட பின்னரே இது நரபலி தொடர்பான கோணம் என்பது தெரியவந்தது” என்றார். மேலும், சாகுவுக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் முன்னதாக எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், வழியில் சந்தித்த பிறகே அவரை வீட்டிற்கு அழைத்து கொலை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரத்தக்கறையுடன் கூடிய கூர்மையான ஆயுதமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் பலருக்குத் தொடர்பு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக, சாகுவின் தாய், சகோதரன் மற்றும் மைத்துனி ஆகியோரும் விசாரணையின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சாகுவின் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கடந்த 10 ஆண்டுகளாக அவரைவிட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சாகு பில்லி சூனியம் போன்ற அமானுஷ்ய நடைமுறைகளில் ஈடுபட்டு வந்ததே அவரது மனைவி அவரைவிட்டுப் பிரிந்து செல்ல முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



