கணவரின் உடலை காரில் எடுத்துச் சென்று, சாலையில் வைத்து வழிப்பறி கொலை நடந்தது போல் நாடகமாடிய சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த சோகத்தில் மனைவி கதறிய நிலையில், அவர் சொன்ன தகவல்களையே அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஆனால், அந்தக் கதையின் பின்னால் இருந்த உண்மை விசாரணையின் போக்கையே மாற்றியது.
மலூர் அடுத்த வேலகவுண்டன்புதூரைச் சேர்ந்த செங்கல் வியாபாரி பூபதி, செப்டம்பர் 1-ம் தேதி ஓமலூர்–சங்ககிரி சாலையில் காருக்குள் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். அவருடன் காரில் இருந்த மனைவி சுஜிதாஸ்ரீ, 3 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து கணவரை வெட்டிக் கொன்றதாகவும், நகைகளை பறித்துச் சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
அவரது புகாரின்படி முதலில் சாலையில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவமாகவே வழக்கு விசாரணை நகர்ந்தது. காரை எங்கு நிறுத்தினார்கள், எப்போது அந்தக் கும்பல் வந்தது, எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது, என்னென்ன நகைகள் பறிக்கப்பட்டன என்பது குறித்து போலீசார் தகவல்களை சேகரித்தனர்.
ஆனால், பூபதியின் குடும்பத்தினர் தெரிவித்த சந்தேகங்கள் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தின. சுஜிதாஸ்ரீ கூறிய சம்பவத்தை மட்டும் நம்பாமல், அவரது பின்னணி மற்றும் குடும்பச் சூழ்நிலையையும் போலீசார் ஆய்வு செய்தனர். அந்த விசாரணையில், வழிப்பறி கொலை என்ற கதை மீது சந்தேகம் வலுத்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பூபதி சாலையில் கொலை செய்யப்படவில்லை என்பதும், வீட்டிலேயே அவரை கொலை செய்துவிட்டு உடலை காரில் எடுத்துச் சென்றதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் ஓமலூர்–சங்ககிரி சாலையில் காரை நிறுத்தி, வெளிநபர்கள் தாக்குதல் நடத்தியது போல் சம்பவத்தை உருவாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதன் பின்னணியில் குடும்பத்துக்குள் நீடித்த பிரச்சனைகள் மற்றும் சொத்து தொடர்பான தகராறுகள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதோடு, சுஜிதாஸ்ரீக்கு சந்தோஷ்ராஜ் என்பவருடன் இருந்ததாகக் கூறப்படும் திருமணத்துக்கு வெளியேயான உறவும் கொலைக்கான காரணங்களில் ஒன்றாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தத் திட்டத்தில் சுஜிதாஸ்ரீயுடன் சந்தோஷ்ராஜும், அவரது 13 வயது மகனும் தொடர்புடையதாக போலீசார் கூறுகின்றனர். இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். சுஜிதாஸ்ரீ சேலம் மத்திய மகளிர் சிறையிலும், சந்தோஷ்ராஜ் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். 13 வயது சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.
கணவர் கொலை செய்யப்பட்டதாக மனைவி அளித்த புகார், இறுதியில் அந்தக் கொலையை மறைக்க உருவாக்கப்பட்ட நாடகம் என விசாரணையில் மாறியிருப்பது இந்த வழக்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: “அம்மா வேணும்” கதறும் 3 குழந்தைகள்.. குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷனுக்குப் பிறகு இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!



