தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‛மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தற்போது புதுக்கோட்டையில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, “மத்திய அமைச்சர் அமித்ஷாவை நான் சந்திப்பது குற்றம் என்றால், முதலமைச்சரும், அவரது மகனும் சென்று பிரதமர் வீட்டு கதவை தட்டினார்களே அதற்கு பெயர் என்ன? அவர்கள் சந்தித்தால் தவறு இல்லை. நாங்கள் சந்தித்தால் தவறு. இந்திய நாட்டுடைய உள்துறை அமைச்சர் தானே அவர். வேறு யாரும் இல்லையே. அவரை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 99 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்கிறார்கள். அவர்கள் கூறிய 525 அறிவிப்புகளில் ஒரு 10 அறிவிப்புகளை முன்வைத்து புதிய பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று திமுக ஆட்சிக்கு எவ்வளவு மார்க் நீங்கள் போடுகிறீர்கள் என்று கேட்போம். அவர்கள் கொடுத்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் இல்லை என்று கூறலாம். இதற்காக நாங்கள் அவர்களுடைய செல்போன் நம்பரை கேட்கப் போவது கிடையாது.
2026 தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுகவில் ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கை முடிந்துவிட்டது. திமுகவில் தான் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கிறார்கள்.” என்றார். மேலும், திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது என குற்றம் சாட்டிய அவர், நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுக் ஆட்சி காலத்தில் செய்த நலத்திட்டங்களை குறிப்பிட்டார். ரூ.7 ஆயிரத்து 50 கோடிக்கு லேப்டாப் கொடுத்துள்ளோம். தாலிக்கு தங்கமும் கொடுத்து கொண்டுதான் இருந்தோம். இந்த 4 ஆண்டு ஆட்சியில்தான் கொடுக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நேரத்தில்தான் லேப்டாப்க்கு என்று டெண்டர் அறிவிக்க முடியாமல் ஓராண்டு காலம் எல்லா பணிகளும் தள்ளிப்போனது. பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் அதனை கைவிட்டுவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டங்களை எல்லாம் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைவிட்டு விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Read more: அதிமுக ஆட்சிக்கு வந்தால் விஜயபாஸ்கர் முதலமைச்சர் ஆகலாம்..!! – இபிஎஸ் பரபரப்பு பேச்சு