தன்னை கொலை செய்ய முயன்றதாக ஈரான் பொறுப்பேற்றால், அந்த நாடு “முழுமையாக அழிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னை குறிவைத்து நடைபெறும் எந்தவொரு கொலை முயற்சிக்கும் இந்த உத்தரவு நேரடியாக பொருந்தும் என்று அவர் தெரிவித்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “எனக்கு மிகவும் உறுதியான உத்தரவு உள்ளது.. எதாவது நடந்தால், அவர்கள் இந்த பூமியின் மேற்பரப்பிலிருந்தே அழிக்கப்படுவார்கள்,” என்று கூறினார்.
காமெனி மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி – ஈரான் எச்சரிக்கை
இதற்கு பதிலடியாக, ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ட்ரம்பை ஈரான் எச்சரித்தது. காமெனியின் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ட்ரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார்.
“எங்கள் தலைவரை நோக்கி எந்தவொரு ஆக்கிரமிப்பு கை நீட்டப்பட்டாலும், அந்த கையை நாங்கள் வெட்டுவதோடு மட்டுமல்ல, அவர்களின் உலகத்தையே தீக்கிரையாக்குவோம்,” என்று ஈரான் ஆயுதப்படைகளின் பேச்சாளர் ஜெனரல் அபோல்பழ்ல் ஷேகர்சி தெரிவித்தார்.
முன்னரே ஆலோசகர்களுக்கு உத்தரவு – ட்ரம்ப்
முன்னதாக, தன்னை கொலை செய்ய ஈரான் முயன்றால் அந்த நாட்டை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று தனது ஆலோசகர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்தார். அவர்கள் அதை செய்தால், அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.. நான் உத்தரவு விட்டுவிட்டேன்.. அவர்கள் அதை செய்தால், எதுவும் மீதமிருக்காது,” என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அரசியலமைப்பின்படி, ட்ரம்ப் கொலை செய்யப்பட்டால் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அதிபராக பொறுப்பேற்பார். ஆனால் ட்ரம்ப் வழங்கிய எந்த உத்தரவுகளுக்கும் அவர் சட்டபூர்வமாக கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஈரானில் போராட்டங்கள் – உயிரிழப்பு 4,484 ஆக உயர்வு
டிசம்பர் 28 முதல் ஈரானின் மோசமான பொருளாதார நிலை காரணமாக தொடங்கிய போராட்டங்களை அரசு கடுமையாக ஒடுக்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பின் தகவல்படி, இந்த போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 4,484 ஆக உயர்ந்துள்ளது. இந்த அமைப்பு, நாட்டுக்குள் உள்ள செயற்பாட்டாளர்களின் வலையமைப்பின் மூலம் அனைத்து மரணங்களையும் உறுதிப்படுத்தி வருவதால், கடந்த ஆண்டுகளில் நடந்த போராட்டங்களின் போது துல்லியமான தகவல்களை வழங்கியதாக அறியப்படுகிறது. இருப்பினும், இந்த எண்ணிக்கையை Associated Press (AP) தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த பல தசாப்தங்களில் ஈரானில் நடந்த எந்தவொரு போராட்டத்தையும் விட அதிகமானது. இது, 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய குடியரசை உருவாக்கிய புரட்சியின் போது ஏற்பட்ட குழப்ப நிலையை நினைவுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இணைய முடக்கம் – உண்மை தகவல்கள் தாமதம்
கடந்த சில நாட்களாக போராட்டங்கள் இல்லாவிட்டாலும், ஜனவரி 8 முதல் அரசு விதித்த இணைய முடக்கம் காரணமாக தகவல்கள் மெதுவாக வெளிவந்து கொண்டிருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதுவரை 26,127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.. கைது செய்யப்பட்டவர்களில் சிலரை மரண தண்டனைக்கு உட்படுத்தலாம் என்ற அதிகாரிகளின் கருத்துகள், உலகிலேயே அதிக மரண தண்டனை வழங்கும் நாடுகளில் ஒன்றான ஈரானில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



