ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்றால் அது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் முடியவே முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையம் திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; வறுமையை ஒழித்து ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு செயல்படுத்தப்பட்ட ‘வாழ்ந்து காட்டுவோம்’ எனும் முன்மாதிரி திட்டம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இதனால் முன்னேறி இருக்கிறார்கள். பெண்களுக்கான அதிகாரத்தை வழங்கியது மட்டுமல்லாமல், உழவர்களுக்கு நிலைத்த சமுதாயக் கட்டமைப்புகளையும் இந்தத் திட்டம் உருவாக்கி தந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தி பெண்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஒரு தரவை நான் சொல்ல விரும்புகிறேன். பெண்கள் தலைமையேற்று நடத்தக்கூடிய 8 ஆயிரத்து 400 நிறுவனங்களுக்கு 2022-ஆம் ஆண்டிலிருந்து 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை 267 கோடி ரூபாய்க்கு இந்தத் திட்டம் மூலம் கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
ஊரகப் பகுதிகளில், 1 லட்சம் பேர் புதிய தொழில்கள் தொடங்கவும், 53 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தத் திட்டம் சாதனை படைத்திருக்கிறது. அதேபோன்று, பணிபுரியும் பெண்களுக்காக தமிழ்நாடு முழுவதும் நாம் தொடங்கி வரும் தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு இருக்கிறது. கூடிய விரைவில், சென்னையில் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயங்கப்போகிறது. அதற்கான திட்டத்திலும் உலக வங்கி நமக்காக உதவியிருக்கிறார்கள். மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலமாக, நம்முடைய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதில், உலக வங்கி பெரிய அளவில் உதவியிருப்பதுடன், இந்தியா முழுவதும் செயல்படுத்துவதற்கான மாடலாக தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் வெற்றியடைந்திருக்கிறது என்று பாராட்டியும் இருக்கிறார்கள்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 750 கி.மீ. சாலைகளை மேம்படுத்தி, விபத்துத் தடுப்பு பகுதிகள் உட்பட பல்வேறு பராமரிப்பு பணிகளை 2 ஆயிரம் கி.மீ. சாலைகளில் மேற்கொள்ள உதவியிருக்கிறது. தமிழ்நாடு நீர்வள – நிலவள திட்டமானது நீர்ப்பாசனத் துறையின் நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கு வித்திட்டிருக்கிறது. இதனால், வேளாண்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
வருங்காலத்தில், உலக வங்கி உதவியுடன் 409.79 மில்லியன் டாலர் மதிப்பிலான முக்கியமான சில திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போகிறோம். முதலாவதாக, WE-SAFE எனும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் துணை முதலமைச்சர் அவர்களால் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்றால் அது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் முடியவே முடியாது என்றார்.
Read more: காய்ச்சல் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்…! சுகாதாரத்துறை உத்தரவு…!