சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் அன்னபூரணி தம்பதி. இருவரும் சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜிம்மில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணிடம் சீனிவாசன் உனது பெயரில் ஜிம் ஒன்றை அமைத்து தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பிய இளம் பெண் தனது ஆதார் கார்டு உள்ளிட்ட பிற ஆவணங்களை கொடுத்துள்ளார். அதனை பயன்படுத்தி சீனிவாசன் பாரிமுனையில் உள்ள தேசிய வங்கியில் 1.75 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால், வாக்குறுதி அளித்தப்படி உடற்பயிற்சி கூடம் அமைத்து தரவில்லை. வங்கிக்கு தவணை தொகையையும் செலுத்தவில்லை.
இது குறித்து கேட்டதற்கு அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அறிந்து சீனிவாசனும், அன்னபூரணியும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கிடையே போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தம்பதிகள் இருவரும் ஜிம்மிற்கு வரும் கஸ்டமர்களிடம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்து, இரண்டு மாதம் மட்டுமே பயிற்சி அளித்துவிட்டு மோசடிகள் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து சீனிவாசனை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அன்னபூரணியை போலீசார் தேடி வருகின்றனர்.
Read more: திராட்சை பழத்தை கழுவாமல் சாப்பிடுகிறீர்களா..? எவ்வளவு ஆபத்தானது தெரிஞ்சுக்க இத படிங்க..!