கருவில் உள்ள சிசு பாலினம் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியராக இருந்தால், விதிமுறைகளின்படி துறை ரீதியான நடவடிக்கை, சட்ட நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 6-வது வாரமாக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 38 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை5 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இதுவரை 5 வாரங்களாக 185 முகாம்கள் நடத்தப்பட்டதில் 2,60,910 பேர் பயன் பெற்றுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு மருத்துவர் நடத்தி வரும் ஸ்கேன் சென்டரில், கருவில் உள்ள சிசு பாலினம் தெரிவித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல, சேலம் பகுதியில் ஒரு ரேடியாலாஜி மருத்துவர் கருவில் உள்ள பாலினம் குறித்து தெரிவித்ததாக புகார் வந்தது. அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, காவல் துறையிலும் புகார் தரப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபோன்ற செயல்கள் செய்யக்கூடாது. இது மனிதாபிமானமற்ற செயல். தமிழகத்தில் ஆண் குழந்தையாக இருந்தாலும்,பெண் குழந்தையாக இருந்தாலும் இரண்டும் சமம் என்ற வகையில் பாவிக்கப்பட்டு வருகிறது. கருவில் உள்ள பாலினத்தை தெரிவிக்கக் கூடாது என்பது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவர்கள் இந்த மாதிரியாக செயல்களை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு ஊழியராக இருந்தால், விதிமுறைகளின்படி துறை ரீதியான நடவடிக்கை, சட்ட நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்படும். சொத்துகள் முடக்குவது என்பது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் இல்லை என்றார்.