திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வர இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுத்து வருவதாக மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணி எம்பிக்களின் கையெழுத்துகளை நாங்கள் சேகரித்து வருகிறோம். அவற்றை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்போம் என தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால், அதற்கு மக்களவை உறுப்பினர்கள் 100 பேரின் ஆதரவு அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேரின் ஆதரவு அவசியம். இந்த தீர்மானம் ஏற்கப்பட்டால், மூன்று பேர் கொண்ட குழு அதனை விசாரிக்கும். அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இரு அவைகளும் சிறப்பு பெரும்பான்மையுடன் (மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிப்பார்., இந்தியாவில் இதுவரை எந்த ஒரு நீதிபதியும் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


