அதிகரிக்கும் ஆணவ கொலை: தென் தமிழகத்தில் அரசு இதை செய்ய வேண்டும்..!! – பா. ரஞ்சித் பரபர அறிக்கை

pa ranjith

திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை, வன்கொடுமை அதிகம் நடக்கும் பகுதிகளாக அறிவித்து, அங்கு சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என பா. ரஞ்சித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை தமிழ்செல்வி – சந்திரசேகர் தம்பதியினரின் மூத்த மகன் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ். கடந்த 27ம் தேதியன்று ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று கவின் தனது தாயோடு தாத்தாவின் மருத்துவச் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். மேற்படி மருத்துவமனையில்தான் அவரது காதலியான சுபாஷினியும் பணிசெய்து வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுபாஷினியின் பெற்றோர்களான தந்தை சரவணன், தாய் கிருஷ்ணவேணி இருவரும் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் கவின் – சுபாஷினி காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த எதிர்ப்புக்கிடையே இவர்களின் காதல் தொடர்ந்திருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த 27ம் தேதியன்று பட்டப் பகலில் சுபாஷினி வீட்டு அருகில் வைத்து சுபாஷினியின் உடன்பிறந்த சகோதரன் சுர்ஜித் கொடூரமான முறையில் கவினை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

முதற்கட்டமாக இப்படுகொலையில் சுர்ஜித் மட்டுமே குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். மேற்படி இப்படுகொலையில் அவனது பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து, அவர்களையும் குற்றவாளியாகச் சேர்க்கச் சொல்லி கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னால் வந்த அழுத்தத்தால் சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்றவாளியாகத் தற்போது சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்னும் கைது செய்யப்படவில்லை.

வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் படி, வன்கொடுமை சம்பவம் நடந்தவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிறது. இதுவரை ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவில்லை. உடனடி ஊடக வெளிச்சம் கிடைக்கும் நவீன காலத்திலும் ஒவ்வொரு முறை இத்தகைய சம்பவங்கள் நிகழும்போது, பட்டியலின மக்கள் போராடித்தான் குறைந்தபட்ச நீதியைப் பெற வேண்டியிருக்கிறது, அப்படித்தான் கவினின் பெற்றோர்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தலித் வழக்குகளைக் கையாள்வதில் முந்தைய அரசு பின்பற்றிய அதே அலட்சியத்தைத் தான் இந்த அரசும் பின்பற்றுகிறது. சட்டம் ஒழுங்கு பல நிலைகளில் சீர் கேட்டு போயிருக்கும் சூழலில், இந்த ஆணவக்கொலைக்கு காரணமான சுர்ஜித்தின் பெற்றோர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, இந்த வழக்கு எப்படி கையாளப்படும் என்கிற சந்தேகம் வலுக்கிறது. இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் அளிக்காமல் தமிழ்நாடு அரசு மிக வெளிப்படையாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதியக் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன என்கிற நிதர்சனத்தை ஏற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, அரசு வேலை என்பதோடு முடித்துக்கொள்ளாமல், சாதிப் பிரச்சினைகள் அதிகம் உள்ள மாவட்டங்களைக் கூடுதல் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட வேண்டும். திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதிகளின் படி (Atrocity Prone Areas) வன்கொடுமை அதிகம் நடக்கும் பகுதிகளாக அறிவித்து, அங்கு சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்த கணமே, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த அடிப்படை சட்ட விதிகளைக் கூட காவல்துறை பின்பற்றுவதில்லை. இதைத்தான் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டி இருந்தது. சாதியக் குற்றங்கள் ஒவ்வொரு முறை நிகழும்போதும், சம்பவம் நடந்த கணமே ஊடகத்தில் மாற்றுக் கதையாடல்களை உலவ விடும் போக்கை, காவல்துறையினர் கைவிட வேண்டும்.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுப் பட்டியலினச் சமூக மக்களின் சமூக உரிமை மற்றும் மாண்பை மதித்து, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு, பட்டியலின மக்களோடு துணை நிற்க வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்புணர்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். பள்ளியில் நிலவும் சாதியப் பாகுபாடுகளைக் களைய நீதிபதி சந்துரு தலைமையில் அமைத்த குழுவைப் போல, ஆணவக்கொலைகளைத் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி, தலித் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படவேண்டும்.

ஆணவக்கொலைகளைப் போர்க்கால அடிப்படையில் அணுகி, கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், இத்தகைய குற்றங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கான எல்லா சமூக காரணிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்ட கோரிக்கையைத் புறக்கணித்து வரும் திமுக அரசையும் அதன் கூட்டணிக்கட்சிகளையும் கண்டிக்கின்றோம் என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Read more: பசிபிக் நாடுகளை அலறவைத்த பெரும் சுனாமி.. வீடுகள் நீரில் மூழ்கும் காட்சி வைரல்..!!

English Summary

Increasing honor killings: Tamil Nadu government should do this in South Tamil Nadu..!! – P. Ranjith

Next Post

ரஷ்யா நிலநடுக்கம் எதிரொலி.. சுனாமி ஆபத்தில் உள்ள நாடுகள், தீவுகள்.. முழு லிஸ்ட் இதோ..

Wed Jul 30 , 2025
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 74 கி.மீ ஆழத்தில் இருந்தது மற்றும் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு தென்கிழக்கே 133 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதியில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் […]
after the 8 7 magnitude earthquake in russia how far could the tsunami reach and whos most at risk 1

You May Like