ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே படகு தீ பிடித்த விபத்தில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
தகவலின்படி, படகில் மொத்தம் 18 இந்திய மாலுமிகள் இருந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதும், அவ்வழியாக சென்ற மற்றொரு கப்பல் விரைந்து செயல்பட்டு அனைவரையும் மீட்டுள்ளது. இதில் ஒரு மாலுமி உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது துபாயில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், மீட்கப்பட்ட இந்திய மாலுமிகளை தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்ததாகவும், படகு உரிமையாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்த செய்தி வருத்தமளிப்பதாகவும் தூதரகம் தெரிவித்திருந்தது. இந்த விபத்து உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தியில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடாவை இணைக்கும் இந்த கடல் பாதை, உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
மேலும், இந்தப் பகுதி சமீப காலமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தால் கவனத்தில் இருந்து வருகிறது. அந்த சூழ்நிலையில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது பாதுகாப்பு கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது தீ விபத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Read more: கடைசி நேரத்தில் சொதப்பும் ஆளுநர்.. விஜய் பதவி ஏற்பதில் மீண்டும் சிக்கல்..! என்ன ஆச்சு..?



