கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்து, உடலைச் சாக்குப்பையில் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள நல்லட்டிபாளையம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து நல்லட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இக்கொடூரக் கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில், கூடுதல் எஸ்பி விவேகானந்தன் மேற்பார்வையில், பேரூர் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கிணத்துக்கடவு, கோவில்பாளையம், வடசித்தூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் தமிழக – கேரள எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த 120-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராப் பதிவுகளை தனிப்படையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவன சிசிடிவி காட்சியில், குறிப்பிட்ட ஒரு மோட்டார் சைக்கிள் அடிக்கடி வந்து சென்றதும், அதே நாளில் அங்கு தீப்பற்றி எரிந்ததும் பதிவாகியிருந்தது.
அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை முடுக்கிவிட்ட காவல்துறையினருக்கு, அது பொள்ளாச்சியிலிருந்து வந்ததும், அதில் இருவர் பயணித்ததும் தெரியவந்தது. மேலும், அந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அங்குள்ள ஒரு எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலையில் பணியாற்றும் பழனிமுத்து (35) என்பதும், அவருடன் வந்தது அவரது தந்தை குருநாதன் (60) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்துக் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பொள்ளாச்சியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது, அதே கடையில் பணியாற்றிய சங்கீதா (30) என்ற திருமணமான பெண்ணுடன் பழனிமுத்துவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் பழனிமுத்துவின் மனைவிக்கு தெரியவரவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்கீதா தன் குடும்பத்தைப் பிரிந்து பழனிமுத்துவுடன் வந்துள்ளார். இருவரும் கிணத்துக்கடவு காமராஜர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி பணப் பிரச்சனையால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று இரவும் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பழனிமுத்து, வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து சங்கீதாவின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் சங்கீதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலையை மறைக்க திட்டமிட்ட பழனிமுத்து, தனது தந்தை குருநாதனை தொடர்புகொண்டு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சங்கீதாவின் சடலத்தை சாக்குப்பையில் கட்டி, மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தான் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர். வழியில் கோவில்பாளையம் பெட்ரோல் பங்ககில் வாங்கிய பெட்ரோலை உடலின் மீது ஊற்றி தீவைத்து எரித்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
சம்பவத்திற்குப் பிறகு பழனிமுத்து வேலைக்கு வராததாலும், சிசிடிவி ஆதாரங்கள் சிக்கியதாலும் காவல்துறையினர் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கொலையாளி பழனிமுத்து மற்றும் கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது தந்தை குருநாதன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடு..!! 3 பேர் உயிரிழந்த சோகம்..!! கனமழையால் பேரதிர்ச்சி சம்பவம்..!!



