உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்படுகிறது. அந்த முகாம்களில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கி உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது. அடுத்தகட்டமாக இத்திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் சார்ந்த விவரங்களை எமிஸ் தளத்தில் அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
அதன்படி மாவட்டங்களில் ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின்படி மட்டுமே இனிவரும் நாட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வகுப்பாசிரியர்கள் தங்கள் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவு செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.