அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் எந்த அறிகுறியும் தெரியவில்லை.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 5 நாட்களில் ஈரானில் மட்டும் 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லெபனான் நாட்டில் சுமார் 60 பேர், இஸ்ரேலில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த சேர்ந்த 6 ராணுவ வீரர்களும் இந்த மோதலில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய தாக்குதல்கள்
இஸ்ரேல் மீண்டும் ஈரானில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்கியுள்ளது. அதே நேரத்தில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளுக்கும் மீண்டும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்கள் லெபனானின் தலைநகர் பெய்ருட் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா பகுதிகளில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈராக் எல்லைப் பகுதியில் “பயங்கரவாத நடவடிக்கைகள்” நடைபெறக்கூடும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் ஈராக் குர்த் அரசியல் தலைவருடன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலில் விரிவடையும் போர்
இந்த மோதல் கடல் பகுதிகளுக்கும் பரவியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் பேசிய போது “ சர்வதேச கடல் எல்லையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானின் போர்க்கப்பலை மூழ்கடித்ததாக தெரிவித்தார்.
அதே நேரத்தில், இஸ்ரேல் லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பை மீண்டும் தாக்கியது. இதனிடையே ஈரான், பஹ்ரைன், குவைத், இஸ்ரேல் ஆகிய நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நேட்டோ பாதுகாப்பு அமைப்புகள் ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை துருக்கி வான்வெளிக்குள் நுழையும்முன் தடுத்து நிறுத்தியதாக துருக்கி அரசு கூறியுள்ளது.
உலக சந்தைகளில் அதிர்ச்சி
இந்த போர் காரணமாக உலக சந்தைகளும் அதிர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகளாவிய பங்குச்சந்தைகளிலும் கவலை நிலை உருவாகியுள்ளது. அதிகரிக்கும் எரிசக்தி விலை உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
ஈரானின், இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை அமைப்பு பாரசீக வளைகுடாவின் வடக்கு பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இதனால் அந்த எண்ணெய் கப்பல் நடுக்கடலில் பற்றி எரிகிறது.. நேற்று இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்கியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.. இந்த தகவல் ஈரான் அரசின் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. ஆனால் தாக்குதல் குறித்து முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதற்கு முன்னர் குவைத் கடற்கரைக்கு அருகில் ஒரு எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
இந்நிலையில், ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா அமோலி, டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலியர்களின் “இரத்தம் சிந்தப்பட வேண்டும்” எனக் கூறிய கடும் செய்தியை ஈரான் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.



