2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி கூட்டணியை விரிவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போதைய கூட்டணியில் பாஜக மற்றும் தமாகா மட்டுமே உள்ள நிலையில், புதிய கட்சிகளை சேர்த்துக்கொள்ளும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இதற்காக, தளபதி விஜய் தலைமையிலான தவெக மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி பக்கம் அதிமுக பார்வையை திருப்பியுள்ளது. சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இபிஎஸ், விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு குறித்த கேள்விக்கு நேரடியாக எதிர்ப்புத் தெரிவிக்காமல், திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை, தவெகவிற்கு அனுப்பப்படும் நேரடி சைகையாகவே அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.
இதேபோல், சீமான் குறித்தும் EPS நேரடியாக கருத்து தெரிவித்துள்ளார். திமுகவுக்கு எதிரானவைகள் அனைவரும் ஒரே அணியில் வரவேண்டும் என்பதைக் கூறியதன் பின்னணியில், சீமானுக்கும் கூட்டணித் தூணியை வீசும் நோக்கம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தற்போது பாஜக தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை EPS ஏற்க தயங்கும் சூழலில், ‘வேறு ஆப்ஷன்கள் உள்ளன’ என காட்டும் நோக்கத்தில் தான், விஜய் மற்றும் சீமான் பக்கம் அதிமுக அணுகுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தவெகத் தரப்பு, “பாஜக உடனான எந்த கூட்டணியிலும் ஈடுபடமாட்டோம்” என தெளிவாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதிமுகவை குறித்து எந்த எதிர்மறையான கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சீமான் தொடர்ந்து “திராவிட – தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை” எனத் தெரிவித்துவருகிறார். ஆனால், திமுகவுக்கு அளிக்கும் விமர்சனத்தைப் போல அதிமுகவுக்கு அவர் எதிர்வினை காட்டுவதில்லை என்பது அரசியல் விமர்சனமாக எழுந்திருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லாத நிலையில், அதிமுகவோடு சீமான் இணையும் சாத்தியம் குறித்தும் கருத்துக்கள் கிளம்பியுள்ளன.
1996-ல் ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்து கருணாநிதி, அதிமுக ஆட்சியை அகற்றினார். 2011-ல் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா, திமுக ஆட்சியை முடித்தார். இதுபோல, இப்போது EPS விஜய்யையும் சீமானையும் கூட்டணிக்கு இழுத்துவந்து, திமுக எதிரணியை ஒருங்கிணைக்க திட்டமிட்டிருக்கிறார் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றனர்.
Read more: மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..!! – நடந்தது என்ன..?