தலைக்கு குளித்தப் பின் சாம்பிராணி புகை போடுவது நல்லதா? யாரெல்லாம் தவிர்க்கணும்?

Hair 2026

இன்றைய நவீன காலகட்டத்தில் தலைமுடியை விரைவாக உலர வைப்பதற்காக ‘ஹேர் ட்ரையர்’ உள்ளிட்ட பல்வேறு நவீன உபகரணங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும், இவற்றின் தொடர் பயன்பாட்டால் முடி வறட்சி, தீவிர முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பல சிக்கல்களைத் தினமும் சந்திக்க வேண்டியுள்ளது.


ஆனால், எந்தவித ரசாயன சாதனங்களும் இல்லாத அக்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களின் கூந்தலை எவ்வாறு அடர்த்தியாகவும் கருகருவென ஆரோக்கியமாகவும் பராமரித்தார்கள் என்பதில் தான் இயற்கை பராமரிப்பின் உண்மையான ரகசியம் ஒளிந்துள்ளது.

பழங்காலம் தொட்டே தமிழ் பாரம்பரியத்தில் தலைக்குக் குளித்த பிறகு கூந்தலுக்குச் சாம்பிராணி புகை போடும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இது வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன், குழந்தைகளுக்குக் குளிப்பாட்டிய பின் சளி பிடிக்காமல் தடுத்து, காற்றில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் சிறந்த இயற்கை கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

குறிப்பாக மழை மற்றும் குளிர்காலங்களில் தலையில் தங்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை வேரிலிருந்தே உறிஞ்சி உலர வைப்பதால், மண்டை ஓட்டில் ஏற்படும் பூஞ்சை தொற்று மற்றும் பொடுகுத் தொல்லைகளை இது முழுமையாகத் தடுக்கிறது. மேலும் சாம்பிராணியுடன் வேப்பிலை, துளசி போன்ற மூலிகைகளைச் சேர்த்துப் புகை பிடிக்கும் போது, அது கிருமிகளை அழித்துத் தலையைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

சாம்பிராணி புகையில் உள்ள மிதமான வெப்பம் தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, வேர்க்கால்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டு சேர்க்கிறது. இதனால் முடியின் வேர்கள் வலுவடைந்து முடி உதிர்வு கட்டுப்படுவதோடு, தலைமுடியில் உருவாகும் துர்நாற்றமும் நீங்கி நாள் முழுவதும் இயற்கையான நறுமணம் வீசுகிறது. அத்துடன் சாம்பிராணியின் வாசனை மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைத் தரும் ஆற்றல் கொண்டது.

இருப்பினும், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைப் பிரச்சனை உள்ளவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், நுரையீரலின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு இருமுறை மட்டுமே சாம்பிராணி புகையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read More : ஃப்ரிட்ஜ் மேலே இதை மட்டும் வைக்காதீங்க… ஆபத்து உங்களுக்குத்தான்!

You May Like